ஞாயிறு, 5 மே, 2019
சனி, 4 மே, 2019
எட்டுத்தொகை காட்டும் பண்பாட்டுப் பதிவுகள்
எட்டுத்தொகை காட்டும் பண்பாட்டுப் பதிவுகள்
பண்டைய சமுதாயத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் அறிய இலக்கியங்கள் துணை புரிகின்றன. அச்சமுதாய மக்கள் காலம் காலமாக் கடைபிடித்து வரும் பழக்க வழக்கங்கள், பண்பாட்டுப் பதிவுகளை இன்றைய காலச் சூழலில் நோக்கும் போது வியப்பு மேலிடுகிறது. சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்கள் இல்லற நெறி, விருந்தோம்பல் பண்பு,பிறர் நலனில் காட்டும் அக்கறை ஆகியவற்றை; சிறப்பாக எடுத்துரைக்கின்றன.
ஐந்தினை ஐம்பதில் அன்புநெறி
சங்க இலக்கியங்களில் இல்லறச் செந்நெறிகள் பலவும் பரந்து கிடக்கின்றன. கணவனும் மனைவியும் மனமொத்து தன்னலமின்றி ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை காட்டி, விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்பதை பல பாடல்கள் நமக்கு உணர்த்துகிறன.
மாறன் பொறையனார் ஐந்தினை ஐம்பதில் கணவன் மனைவி எவ்வாறு விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்று நயம்பட உரைக்கிறார். இதனை
சுனைவாய்ச்சிறுநீரை எய்தாது என்று எண்ணிப்
பினைமான் இனிது உண்ண வேண்டிக் கலைமாதன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்தநெறி - (ஐ.ஐம்பது-38)
எனும் பாடல் மூலம் அறியலாம்.
பாலை நிலத்தில் ஓடிக்களைத்து தாகம் தீர்க்க நீர்வேண்டி ஆண்மானும் பெண்மானும் வருகின்றன. சுனையில் ஒருமான் அருந்துவதற்க்கு மட்டுமே சிறிது நீர் உள்ளது. ஒன்றை விட்டு மற்றொன்று நீரை அருந்தவில்லை. இந்நிலையில் பெண்மான் நீர் அருந்தட்டும் என்ற உயரிய நோக்கோடு ஆண்மான் தான் நீரைப்பருகுவது போல் பாவனை செய்தது. அதே போல் பெண்மானும் நீரைப் பருகாமல் ஆண் மான் அருந்தட்டும் என்று நீர் அருந்துவது போல் பாவனை செய்தது. தங்கள் அன்பினை இரு மான்களும் வெளிப்படுத்திய விதத்ததை நமக்கு உணர்த்துகிறது.
இதன்மூலம் இல்லற வாழ்வில் கணவன் மனைவி எவ்வாறு வாழவேண்டும் என்று ஆறறிவு மனிதனுக்கு அஃறிணை உயிர்கள் மூலம் அறிவுரை வழங்கப்படுகிறது.
முதுமையிலும் மனைவியை அன்பு பாராட்டல்
காதல் என்பது உடற்காமம் அன்று அதனையும் கடந்து மனதளவில் உயர்ந்து நிற்பதாகும.; மனைவியின் உடல் அழகு நீங்கி நரையோடு முதுமை வந்தபோதும் கணவன் அவளைப்போற்றுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்பதை,
‘பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்த லோம்புமதி பூக்கே ழூர’ (நற்றிணை)
நற்றிணைப்பாடலால் அறியலாம்.
கணவனின் இல்லமே பெரிதென உவத்தல்
மனைவி தன் பிறந்த வீட்டில் செல்வச்செழிப்புடன் வாழ்ந்த போதும் தனக்கு மாலை சூட்டிய கணவனின் வீடு வறுமையுடையதாக இருப்பினும் தன் தாய் வீட்டை எண்ணாது தன் கணவனின் வீட்டையே பெரிதெனக்கொள்வதாக ஐங்குறுநூற்றுப் பாடல் அழகுறக்கூறுகிறது.
‘அன்னாய் வாழி வேண் டன்னை நம் படப்பை
தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலைக் கூவற் கீழ
மானுண் டெஞ்சிய கலிழி நீரே” (ஐங்குறுநூறு 203)
கணவன் வீட்டுத் தோட்டத்தில் தழைகள் வீழ்ந்து அழுகிய நிலையில் சிறிதாக நீர் நிலை உள்ளது அதிலுள்ள நீரை மான்கள் குடித்துவிட்ட நிலையில் எஞ்சிய நீரை அவள் அருந்துகிறாள். அது தன் தாயின் வீட்டில் தான் உண்ட தேன் கலந்த பாலைவிட இனிமை உடையதாக எண்ணி மகிழ்வதை பாடல் சுட்டுகிறது.
செல்வக்குடியில் பிறந்த பெண் தான் புகுந்த இடத்தில் காணும் வறுமையைப் போக்கிட வேண்டி தன் தாய் வீட்டை நாடிச் செல்வது இல்லை என்னும் சீரிய பண்பைக்கூறுகிறது. பின்வரும் அடிகள் நற்றிணை குறிப்பிடுகிறது.
'கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தாதை கொழுஞ்சோறு உள்ளாள’ (பாடல் 110)
வறுமையிலும் செம்மை
ஓர் ஆடையைக் கிழித்து இருவரும் உடுத்திக்கொள்ளும் வறுமை வந்தபோதும் கணவன் மனைவி இருவரும் அன்பினால் ஒன்றி வாழ்வதே இல்லற மாண்பாகக் கலித்தொகை குறிப்பிடுகிறது.
‘ஒரே ஒகை தம்முள் தழீஇ. ஒரோ ஒகை
ஒன்றன் கூறாடை உடுப்பவரே யாயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” (கலித்தொகை)
விருந்தோம்பலைப் போற்றும் பண்பு
‘மருந்தேயாயினும் விருந்தோடு உண்” என்று கொன்றை வேந்தர் குறிப்பிடுவது போல சங்க காலம் முதல் இன்று வரை இல்லறத்தில் விருந்தோம்பல் செய்வதை பெரிதும் போற்றப்பட்டு வருகிறது. எனவேதான் வள்ளுவர் விருந்தோம்பலுக்கென தனியே அதிகாரம் வகுத்து அப்பண்பை இவ்வுலகிற்கு சிறப்பாக எடுத்து இயம்புகிறார்.
வீட்டிற்கு வந்த விருந்தினரை முகம் மலர வரவேற்று நன்கு உபசரித்து விருந்தோம்பி அவரை மகிழ்வுடன் அனுப்பிவிட்டு இனி யாரேனும் விருந்தினர்கள் வரமாட்டார்களா எனத் தன் வீட்டு வாயிலில் காத்திருப்பவன் விண்ணலகில் நல்ல விருந்தினராக மதிக்கப்படுவார்கள் என்கிறார்.
‘செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத்தவர்க்கு” – (குறள் 85)
என்ற குறள் மூலம் அறியலாம்.
நற்றிணை காட்டும் விருந்தோம்பல்
நள்ளிரவில் தம் இல்லம்நாடி விருந்தினர் வந்தாலும் முகம் கோணாமல் பேணும் பெண்ணை நற்றிணை நயம்பட உரைக்கிறது.
‘அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின் மெல்லியல்” - நற்றிணை
மேலும் கணவனும் மனைவியும் ஊடல் கொண்டிருக்கும் வேளையில் விருந்தினர் வரும்போது விருந்தினர்கள் முன்னிலையில் தங்களின் ஊடலைக் காட்டக்கூடாது என்று கருதி தங்கள் ஊடல் தணித்து அவர்களை விருந்தோம்பிப்பேணும் கடமையில் ஈடுபடுவர் என்பதை நற்றிணைப் பாடல் விருந்தோம்பல் சிறப்பை கூறுகிறது.
இல்லாளின் கடமை
சுற்றத்தாரிடம் சினம் கொள்ளாதிருத்தல் கணவன் வருவாய்க்கேற்பச் செலவு செய்தல், உறவினரை அன்புடன் பாதுகாத்தல், விருந்தினரைப் பேணல், தெய்வ வழிபாடு போன்ற பண்புகளை இல்லறப் பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என சங்கப் பாடல்கள் உணர்த்துகிறது.
‘வருவாய்க்குத்தக்க வழக்கறிந்து சுற்றம்
வெகுவாமை வீழ் விருந்தோம்பி - திருவாக்கும்
தெய்வத்தை எஞ்ஞான்றும் தெற்ற வழிபாடு
செய்வதே பெண்டிர் சிறப்பு'
சங்க கால இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்கள் மூலம் கணவன் மனைவி எவ்வாறு ஒருவர் மீது ஒருவர் அன்போடு ஒழுகுவேண்டும் என்றும் விருந்தோம்பலை எவ்வாறு பேண வேண்டும் என்றும், தான்மட்டும் வாழாமல் இச்சமுதாயமும் பயனுறும்படி வாழவேண்டும் என்றும் எடுத்தியம்புகிறது.
கவிஞர்.கோ.நாகேந்திரன்

வெள்ளி, 3 மே, 2019
கவிஞர்.கோ.நாகேந்திரன்
சங்க இலக்கியத்தில் பண்பாட்டுப் பதிவுகள்
மனித சமுதாயத்தைப் பயன்படுத்துவதை இலக்காகக் கொண்டது இலக்கியம் எனப்படும். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,கலித்தொகை, அகநானுறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானுறு, ஆகிய எட்டுத்தொகை நூல்களும், முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை,திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, மலைபடுகடாம் ஆகிய பத்துப்பாட்டு நூல்களும் சங்க இலக்கியங்களாக குறிக்கப்பெறுகின்றன.
மனித இனத்தையும், மனத்தையும் பண்படுத்தும் இவ்விலக்கியங்கள் பதிவு செய்துள்ள பண்பாட்டுச் சிந்தனைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
பண்பாடு விளக்கம்
பண்பாடு என்ற சொல்லின் அறிமுகமும் விளக்கமும் முதலில் அறிந்திட வேண்டிய ஒன்றாகும். சற்றேக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இரசிகமணி டி.கே.சி, அவர்களால் 'பண்பாடு' என்ற சொல் 'culture ' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக அறிமுகம் செய்யப்பெற்றது. 'உலக நடைமுறையினையும் சமுதாயம் ஒத்துக்கொண்ட நெறிகளையும் பொருந்தி நடத்தலே 'பண்பாடு' என்று என்னப்பெற்றது' என்பர் சோ.நா. கந்தசாமி. எனவே, சமுதாயம் ஏற்றுக்கொண்ட நெறியோடும் உலகநடைமுறையோடும் ஒத்துபோகும் நிலை பண்பாடு என்று குறிப்பிடப்படுகிறது. இத்தகைய பண்பாட்டுச் சிந்தனைகளை நல்கிச் சமுதாயம் செம்மைப்படச் சங்க இலக்கியம் துணைபுரிந்துள்ளது.
நீதிபுகட்டும் பண்பாட்டுப் பதிவுகள்
கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையில், தலைவியை மறந்த தலைவன் ஒருவனுக்குத் தோழி கூறும் அறிவுரை பல்வேறு பண்புகளுக்கு விளக்கம் தருவதாக அமைவது சிறப்பிற்குரியது.
'ஆற்றுதல் என்பது அலந்தார்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்
பண்பெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்
செரிவேனப் படுவது மறைபிறர் அறியாமை
முறையெனப் படுவது கண்ணோடாது உயிரேவவ்வல்
பொரையெனப் படுவது பொற்றரைப் பொறுத்தல்' (கலி.133)
என்னும் பகுதியை, மனித குலத்திற்கு நீதியை புகட்டும் இனியதொரு பண்பாட்டுப் பதிவு எனலாம்.
நற்றினையிழும் இடது போன்றதொரு பதிவு இடம்பெற்றுள்ளது. யாவர்க்கும் இனிமை தரும் பாங்கில் நடத்தல் நயன்; வேறுபாடின்றி யாவரிடமும் அன்பு பாராட்டுதல் நண்பு; குற்றம், தீமை இவற்றைக் கண்டு மனம் கூசுதல் நாணம்; சமுதாயத்திற்குப் பயன்பட இருத்தல், நற்ப்பண்புகள் நிரம்பப் பெறுதல், உலகத்தோடியைதல் ஆகிய பண்பாட்டுக் கூறுகளை எடுத்தியம்பும் நற்றிணைக் காட்சி குறிக்கத்தக்கது.
'நயனும் நண்பும் நானும் நன்குடைமையும்
பயனும் பண்பும் பாடறிந் தொலுகலும்
நும்மினும் உடையேன் மன்னே'
என்னும் பகுதி, நற்றிணை காட்டும் பண்பாட்டுச் சித்திரமாகும்.
அன்பு
சங்க இலக்கியம் காட்டும் இத்தகைய பண்பாட்டு பதிவுகளுள், தனிமனித வளர்ச்சிக்குத் துணைபுரியும் காதலைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். இனிய இல்லத்திற்கு அடிப்படையாக அமைவது அன்பு. அந்த அன்பே இன்று காதலாக கனிந்திருக்கிறது. மன வளர்ச்சியும் அறிவு முதிர்ச்சியும் கொண்டோர் ஒத்த கருத்தோடு, ஒருவர் மீது அன்பு செலுத்துவதே காதல்; இது உயிரியற்க்கையாகும். ,தலைவனும், தலைவியும் சந்தித்த போது காதல் தோன்றுகிறது. இவருடைய தாய், தந்தையரிடையே எவ்வித உறவோ, தொடர்போ இல்லை. இருப்பினும் செம்மண் நிலத்தோடு சேர்ந்த தண்ணீர்போல, இவருடைய அன்பு நெஞ்சங்கள் கலந்துவிட்டன. இதைத்தான்,
'செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே' (குறுந்.40)
என்று குறுந்தொகைப்பாடல் ஒன்று காட்சிப்படுத்தியுள்ளது. மேலும் தலைவன் உன்னை மறந்துவிட்டான்; அவனுக்கு உன் மீது அன்பில்லை என்று கூறும் தோழிக்குப் பதில் கூறும், தலைவி, தலைவன் தன்மீது கொண்டுள்ள அன்பு எத்தகையது என்பதைத் தெளிவுபடுத்துகிறாள்.
'நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே, சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனோடு நட்பே' (குறுந்.4)
என்னும் பாடலில் குறுந்தொகைத் தலைவி காட்டும் அன்புக்காட்சி பதிவாகியுள்ளது.
தனிமனித மேம்பாட்டிற்கு உதவும் இவ்வினிய பண்பினைச் சிறப்பாக படம்பிடித்துள்ளது சங்க இலக்கியம். இத்தகைய பண்பாட்டுச் சிந்தனை உயிரியக்கத்திர்க்கு அடிப்படை என்பதால் இதனை சமூகத்தின் உயிர் மூச்சு எனலாம். மேலும் தனிமனித வளர்ச்சிக்கு உதவும் பண்புகளுள் குறிப்பிடத்தக்கவையாக பிற உயிர்க்குத் தீங்கு செய்யாமை, நன்றி மறவாமை முதலான பண்புகளையும் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது.
பிற உயிர்க்குத் தீங்குசெய்யாமை
நரிவெருஊத் தலையார், பல்சான்றிரே, பலசான்றீரே... எனத் தொடங்கும் பாடலில்,
'நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லோரும் உவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே' (புறம்.195:6-9
என்னும் வரிகளில், நாகரிக சமுதாயத்தில் மிக உன்னதமாகக் கருதப்படும் பிறஉயிர்க்குத் தீங்கு செய்யாப் பண்பினை எடுத்தியம்பியுள்ளார்.
நன்றி மறவாப் பண்பு
சோழன் குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடிய பாடலொன்றில்,
'நிலம்புடை பெயர்வதா யினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க் குய்தி இல்லென
ஆரம்பா டிற்றே' (புறம்.34 : 5 - 7)
என்னும் வரிகள் வாயிலாக, நன்றி மறவாப் பண்பின் உயர்வைச் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டுகிறார். நிலம் கீழ்மேலதாக ஆவதாயிருப்பி னும், ஒருவன் செய்த நன்றியை மறத்தலாகாது என்று அறநூல் கூறுவதாகப் புறநானூறு தரும் செய்தி, மனித சமுதாயத்திற்கு தேவையான பண்பாட்டுச் சிந்தனைகளும் சங்க இலக்கியங்களில் பரவலாகக் கானக்கிடக்கின்றன.
பொதுநலப்பண்பு
உலகம் தோன்றியது முதல் சமுதாய நலன் கருதிப் பாடுபடும் நல்லோர் தோன்றிய வண்ணமே உள்ளனர். அவர்களால் உலகச்சமுதயம் பயன்பெறுகிறது என்பது உண்மை. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, 'உண்டாலம்ம இவ்வுலகம்' என்னும் பாடலில்,
'புகழெனின் உயிருங் கொடுக்குவர்; பலழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்ளூ
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே' (புறம்.182:5 - 9)
என்னும் வரிகளில் இச்செய்தியை வலியுறுத்தியுள்ளார். தன்னலம் கருதாமல், பிறமக்களின் நலத்தைக் கருதும் பண்பு கொண்டோர் இருப்பதாலேயே இவ்வுலகம் நிலைத்திருக்கிறது என்னும் கருத்து, மக்களிடையே பொதுநலப் பண்பை ஊட்டி, உலகை நிலைநிறுத்துவதோடு
மேம்படுத்தவும் துணைசெய்யக்கூடியது.
விருந்தோம்பல்
விருந்தோம்பல் எனும் பலந்தமிழ்ப்பண்பாடு தமிழகத்தில் இன்றளவும் நிலவி வருவது ஒரு தனிச்சிறப்பாகும். தமிழன் தம் இல்லம் தேடி வரும் உற்றார், உறவினர், ஏழை எளியவர்க்கு விருந்தளிதுச் சிறப்பினைச் செய்யும் விருந்தோம்பல் என்னும் பண்பாட்டைச் சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணமுடிகின்றது. விருந்தினர் எந்த நேரத்தில் வந்தாலும் அவர்களை அன்புடன் உபசரிப்பது தமிழர் பண்பாகும். இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு நெய் கலந்த இறைச்சியைச் சமைத்து விருந்தினர்க்குக் கொடுத்த காட்சியை,
'எல்லி வந்த நல்லிசை விருந்திர்க்குக் இளரிழை அரிவை
நெய்துழந்து அட்ட' (நற்.41)
என்னும் அடிகளில் காணவியலுகிறது.
விருந்தினர் உண்டபின் மிஞ்சிய உணவைத் தலைவியுடன் உன்ன நினைக்கும் தலைவனின் விருந்தோம்பற்பண்புடை நெஞ்ச்சத்தை,
'விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தொகை நின்னோடு
உண்டலும் புரைவது' (குறிஞ்சி. 206 - 207)
என்னும் பாடலடிகளில் காணமுடிகின்றது. இல்லம் நாடிவந்த விருந்தினர்க்கும், எளியோர்க்கும் விருந்தளித்த சங்க கால மக்கள் விலங்குகளுக்கும் விருந்தளிதுள்ளனர் என்பதை பரிபாடல் சுட்டிச் செல்கிறது. கோயிலை வலம்வந்து பூஜைசெய்த மகளிர், யானைக்கு கவளம் கவளமாக உணவளித்து அது உண்டு எஞ்சிய எச்சில் உணவைத் தாமும் உண்டவிருந்தோம்பல் பண்பை,
'மலிவுடை யுள்ளத்தான் வந்துசெய் வேள்வி
பண்மண மன்று பின்னிருங் கூந்தவர்
கண்ணிமை கனிந்த காலத்தார் நின்
கொடியேற்று வாரணங் கொல்கவள மிக்கில்' (பரி.19 : 88-91)
என்று பரிபாடல் பதிவு செய்துள்ளது.
ஈகை
சங்ககால மன்னர்கள் தம்மிடம் பரிசில் பெறவரும் பாணர், கூத்தர், விறலியர், பொருநர் முதலியோரது தகுதியை பாராமல், அவர்கள் எத்தனை முறை வந்தாலும் முகம் கோணாமல் கெட்டதையெல்லாம் ஈந்து வந்தனர்.
'ஒருநாட் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாப் போன்ற விருப்பினன் மாதோ' (புறம். 101)
என்றும்
'பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்கவர்
தமதெனத் தொடுக்குவ ராயின் எமதெனப்
பற்றல் தேற்றாப் பயங்கெழு தாயம்' (புறம். 135)
என்னும் அதியமானின் ஈகைதிறத்தை அவ்வையார் சிறப்பித்துப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 'நின்சேன் விளங்கு நல்இசை' என்று மதுரை காஞ்சியும், 'செல்லா நல்லிசை நிறுத்த' என்று அகநானூறும், 'கலங்கா நல்இசை' என்று புறநானூறும் பாடியிருப்பதன் வாயிலாக, ஈகைபண்பைச் சங்க காலத்தினர் தம் நெஞ்சில் நிறுத்திப் போற்றியுள்ளனர் என்பது புலனாகிறது. பண்பாட்டிற்கான பண்பு நலன்களும், அன்பு பிறஉயிர்க்குத் தீங்கு செய்யாமை, நன்றி மறவாமை ஆகியனவும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. சமுதாயத்தை மேம்படுத்தும் பண்பாட்டுச் சிந்தனைகளுள் தன்னலம் கருதாத போதுனலப்பண்பு, விருந்தோம்பல், ஈகை முதலானவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பெற்றுள்ளன. சங்க இலக்கியம் பதிவு செய்துள்ள இத்தகைய பண்பாட்டுச் சிந்தனைகளைப் பின்பற்றி நடப்பது, இன்றைய சமுதாயத்தை ஏற்ற மிக்க இலட்சியப் பாதையில் பயணிக்கச் செய்வதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அவற்றோடு நாவே
மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே
ஆறறி வதுவே அவற்றோடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
என்ற தொல்காப்பிய மரபியல் நூற்பா பகுத்தறிவுச் சிந்தனையின் அடிப்படை உணர்த்துவதாகும். தொடு உணர்வு, நாக்கு, மூக்கு, கண், செவி, மனம் என்ற ஆறினால் அறியப்படும் அறிவே பகுத்தறிவு என்பது தொல்காப்பியர் கருத்தாகும். இவ்வறிவுகளைச் சரியாகப் பயன்படுத்த பகுத்தறிவுவாதம் தூண்டுகோலாக அமைகின்றது
கவிஞர்.கோ.நாகேந்திரன் அரிய புகைப்படங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
கவிஞர்.கோ.நாகேந்திரன் சங்க இலக்கியத்தில் பண்பாட்டுப் பதிவுகள் மனித சமுதாயத்தைப் பயன்படுத்த...
-
கவிஞர்.கோ.நாகேந்திரன் பாடல் ஒலிப்பதிவு கவிஞர்.கோ.நாகேந்திரன் பாடல் ஒளிப்பதிவின் போது கவிஞர்.கோ.நாகேந்திரன் பாடல் ஒளிப்...